சபரிமலையில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி!

 
சபரிமலையில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி!

மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத் தொடக்கத்திலும் சபரிமலை நடை திறக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. சென்ற ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள், அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜையை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

இந்நிலையில், தற்போது பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில் சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்படும் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தரிசனம் பெற 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 5000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றும் அவசியம் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் ஐந்து நாள் தரிசனத்திற்காக இதுவரை சுமார் 25,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web