இன்று குழந்தை வரம் அருளும் சஷ்டி!

 

ஒவ்வொரு மாதமும் அமாவாசையை அடுத்த ஆறாம் நாளாக வருவது சஷ்டி திதி . இந்த திதி முருகப் பெருமானுக்குரியது. இதன் பெருமையை உணர்த்தும் வகையில் தான் `சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’ என்ற பழமொழி கூறப்பட்டது. அதாவது முருகனுக்கு உகந்த சஷ்டி தினத்தில் விரதம் இருந்தால் கர்ப்ப்பம் தங்கும் என்பது அனுபவ மொழி.

இந்த திருநாளில் குழந்தை செல்வத்திற்காக ஏங்கி காத்திருக்கும் பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை துதித்து வந்தால் அவர்களின் மன மற்றும் உடல் குறைபாடுகள் நீங்கி குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இவ்விரதத்தை மாதந்தோறும் வரும் சஷ்டி தினத்தன்று மேற்கொள்வதால் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும் இவ்விரதத்தை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு அந்த முருகப்பெருமானின் அருளால் மிகுந்த செல்வமும், எல்லாவற்றிலும் வெற்றியடையும் யோகமும் கிட்டும்.

செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் மற்றவர்களும் இந்த விரதத்தை தாராளமாக கடைப்பிடிக்கலாம். வீட்டில் அதிகாலையில் நீராடி விநாயகர், குலதெய்வங்களை மனதில் பிரார்த்தனை செய்து பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றவும். தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் செய்யலாம்.

காலையிலிருந்து உணவேதும் அருந்தாமல் “கந்த சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம், முருகன் துதிகள் அல்லது மந்திரங்களை நாள் முழுவதுமோ அல்லது அன்றைய தினம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெபிக்க வேண்டும். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனத்தில் ஓம் முருகா என்று ஜெபித்தபடி வேலையை தொடரலாம். இந்த சஷ்டி விரத தினத்தன்று புலால் உணவுகளையோ, போதை வஸ்துக்களையோ விரதமிருப்பவர் உண்ணக் கூடாது.

மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இந்த சஷ்டி விரதத்தை நல்ல உடல்நிலைக் கொண்டவர்கள், நாள் முழுவதுமாக அல்லது ஒன்று அல்லது இரண்டு வேளை உணவு உட்கொண்டு மேற்கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை உணவு உட்கொண்டு இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை நம்பிக்கையோடு கடைப்பிடித்து வரலாம். முழு நாளும் உபவாசம் இருக்க இயலாதவர்கள் அன்றைய தினத்தில் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் காலையில் முதல் உணவாக எடுத்துக் கொள்ளலாம். சஷ்டியில் தொடர்ந்து விரதம் இருப்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் மிகுந்த செல்வமும், எல்லாவற்றிலும் வெற்றியும், யோகமும் கிட்டும்.