நாளை ஆடிப்பெருக்கு... காவிரி அன்னையை வழிபட்டுத் தாலி மாற்றும் புதுமணத் தம்பதிகள்!

 

தமிழ்நாட்டின் பாரம்பரிய சிறப்புமிக்கப் பண்டிகைகளில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழா நாளை ஆகஸ்ட் 3 ம் தேதி ஆடி 18 மாநிலம் முழுவதும் நீர்நிலைகளில் விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.

ஆடி மாதத்தில் பருவமழை பொழிந்து ஆறு மற்றும் நீர்நிலைகள் நிரம்பி, விவசாயத்திற்கு உயிர் கொடுக்கும் நீர் வளத்தைப் போற்றி நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடுவதே 'ஆடி பதினெட்டாம் பெருக்கு' ஆகும்.

தமிழகத்தின் நதிக்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள், குறிப்பாகக் காவிரி நதிக்கரைகளில் ஒன்றுகூடித் தீபங்கள் ஏற்றி காவிரி அன்னையை சிறப்புடன் வழிபடுவார்கள். ஆடிப்பெருக்கு நாளில் புதுமணத் தம்பதிகள் ஆற்றுக்கு வந்து மேற்கொள்ளும் பாரம்பரிய சடங்குகள் மிகவும் முக்கியமானவை:

திருமணமான புதுப்பெண்கள் காவிரி அன்னையை வழிபட்டு, தாலியில் உள்ள பழைய மஞ்சள் கயிற்றைப் புதிய கயிறாக மாற்றி, கணவனின் கையால் மீண்டும் கட்டிக்கொள்வார்கள். இந்தச் சடங்கை ஆடிப்பெருக்கு நாளில் செய்வதன் மூலம் தம்பதியரின் வாழ்க்கை வளம் பெறும் என்றும், மாங்கல்ய பலம் நீண்ட காலம் நீடிக்கும் என்பதும் ஐதீக நம்பிக்கையாக உள்ளது.