சரஸ்வதி பூஜை செய்யப்போறீங்களா? இத படிச்சிட்டு போங்க!

 


இந்தியா முழுவதும் நவராத்திரி நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் தமிழகத்தில் நவராத்திரியின் ஒன்பதாவது நாளான இன்று சரஸ்வதி பூஜை அனுசரிக்கப்படுகிறது.

இந்த பூஜையை எப்படி செய்யலாம்? நிவேதனமாக என்ன வைத்து வழிபட வேண்டும் என்பது குறித்து பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் உண்டு. எல்லா பண்டிகை நாட்களையும் போல் அதிகாலையில் எழுந்து வீடு , வாசல் சுத்தம் செய்து வாசல் மற்றும் பூஜை அறையில் மாக்கோலம் இட வேண்டும்.

வீட்டை தோரணங்களாலும், பூஜை அறையை மலர்களாலும் அலங்கரிக்க வேண்டும். புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு பூக்களால் அலங்காரம் செய்யலாம். பூஜை அறையில் நடுவில் நான்கு இதழ்களும் சுற்றிலும் எட்டு இதழ்களும் கூடிய தாமரை கோலமிட வேண்டும்.

தாமரையின் நடுவில் ஓம் என்றும் எல்லா இதழ்களிலும், ஐம் என்றும் எழுத வேண்டும். கோலத்தில் நடுவில் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கும் நான்கு மற்றும் எட்டு இதழ்களில் அகல் விளக்குகளும் ஏற்றி வைக்க வேண்டும்.
பூஜைகள் நல்லபடியாக அமைய முழுமுதற்கடவுளாம் விநாயகரை வணங்கி குலதெய்வத்தை மனதார பிரார்த்திக்க வேண்டும்.

சரஸ்வதி ஸ்லோகங்கள், நாமாவளிகள், பாடல்கள், அம்பிகை துதிகள், பாடல்கள் பாடலாம். நைவேத்தியமாக பால் கற்கண்டு சாதம் , இனிப்பு வகைகள் செய்யலாம். பாசிப்பருப்பு சுண்டல் செய்வது கூடுதல் சிறப்பு. இயன்ற அளவு சுமங்கலிகளுக்கு சந்தனக்கலர் ரவிக்கை துணிகள் , மஞ்சள், குங்குமம், மங்கலப்பொருட்கள் வழங்கலாம். ஆரத்தி எடுத்து தீபத்தை பூஜையறையில் சேர்த்து நிறைவு செய்யலாம்.