அவதூறாக பேசிய சர்ச்சை! மீரா மிதுனுக்கு கோர்ட் சம்மன்!!

 

பட்டியலின மக்களை அவதூறாக பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில், மீரா மிதுனை ஆஜராகும் படி சென்னை உயர்நீதி மன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

மீரா மிதுன் தமிழ் சினிமாவில் இருக்கும் பட்டியலின மக்களை குறித்து அவதூறான கருத்துக்களை பேசினார். இது தொடர்பில் அவர் மீது விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பட்டியலின பாதுகாப்பு அமைப்புகள் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரணடையுமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து மீரா மிதுன் அவரது நண்பர் அபிஷேக்குடன் சேர்ந்து தலைமறைவானார். அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கேரளாவில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு சென்னை அமர்வு நீதிமன்றம் மீரா மிதுனுக்கும் அபிஷேக்கிற்கும் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் தற்போது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மீராமிதுன் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அப்ஷேக்கை டிசம்பர் 17-ஆம் தேதி ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.