பத்ம விருதுகள் வழங்கும் விழா: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

 

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாகும்.

2020- ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 119 பேருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. விருது பெற்றவர்களில் 29 பேர் பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை ஆவர்.16 பேர் மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்கள்.

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பத்ம விருதுகளை வழங்கினார். விருது பெற்றவர்களில் கங்கனா ரணாவத், அட்னான் சாமி, ஏக்தா கபூர், கரண் ஜோஹர் மற்றும் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ராமகிருஷ்ணன் ஆகியோரும் அடங்குவர்.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அவரது மரணத்திற்கு பிறகு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவரது மகள் பன்சூரி ஸ்வராஜ் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.