அரை நூற்றாண்டு கடந்தும் கொண்டாடப்படும் தில்லான மோகனாம்பாள்! 53 years of Thillana Mohanambal

 

50 வருடங்களைக் கடந்தும் மக்களால் இன்றும் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது என்றால் அது அந்த படத்தில் பணியாற்றிய அத்தனைப் பேருக்கும் கொடுக்கப்படுகிற மரியாதை தானே?

ஆம்.. காவியமாகவே மக்களால் கொண்டாடப்பட்ட தில்லானா மோகனாம்பாள் படம் திரைக்கு வந்து இன்றோடு 53 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1968ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி வெளியான இந்த படத்தில், சிவாஜி கணேசன், பத்மினி, எம்.என்.நம்பியார், நாகேஷ், டி.எஸ்.பாலையா, மனோரமா ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டியிருந்தனர்.

ஆனந்த விகடன் வார இதழில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதையை ஏ.பி.நாகராஜன் திரைப்படமாக இயக்கினார்.

முகத்தில் பாவனைகளைக் காட்டுவதில் நடிகர் திலகத்திற்கும் நாட்டியப் பேரொளிக்கும் படம் முழுக்கவே சரியான போட்டி இருந்ததென்றால், இன்னொரு புறம் வருகிற காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்து கொண்டே இருப்பார் நாகேஷ் இவர்கள் அத்தனைப் பேரும் போட்டி போட்டு நடித்தார்கள் என்றால், அந்த ரயில் காட்சி ஒன்றே போதும் டி.எஸ்.பாலையாவின் நடிப்பு திறமைக்கு எடுத்துக்காட்டு. ஆத்மார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய மனோரமா என்று படத்தில் ஒவ்வொருத்தருமே கச்சிதமாக அவர்களது கதாபாத்திரங்களை செதுக்கியிருந்தார்கள். இன்றளவிலும் மனோரமாவின் ஆக சிறந்த படங்களின் வரிசையில் ஜில் ஜில் ரமாமணிக்கு தனி இடம் உண்டு. அந்த கதாபாத்திரத்திற்கு அத்தனை மெருகூட்டி நடித்திருப்பார் ஆச்சி மனோரமா.

இதை தனது கனவு கதையாகவே கருதியிருந்தார் கொத்தமங்கலம் சுப்பு. ஆரம்பத்தில் தனது கதையில் தானே நடிக்கும் ஆசையிலும் இருந்தார். அந்த வைத்தி கதாபாத்திரம் கொத்தமங்கலம் சுப்பு நடிக்க வேண்டியது. மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த தில்லான மோகனாம்பாள் படத்தை அதன் கதையாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் பார்க்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது தான்! அரை நூற்றாண்டுகளைக் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிற படங்களின் வரிசையில் நிச்சயம் தில்லானா மோகனாம்பாள் தனி இடம் பெறும்.