முதல்வர் உத்தரவால் பெண் போலீசாருக்கு சங்கடங்களே அதிகம்! திலகவதி ஐபிஎஸ் கருத்து!

 

முதல்வர் செல்லும் வழியில் பாதுகாப்பு காரணங்களுக்காக இனி பெண் காவலர்களை நிற்க வைக்க கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு பல்வேறு புதிய சிக்கல்களை ஏற்படுத்தும் என ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தெரிவித்துள்ளார்.

பலரும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் இது சிக்கலை ஏற்படுத்தும் என திலகவதி தெரிவித்துள்ளார்.

காவல்துறையில் ஆண், பெண் என இருவருக்குமே ஒரே பயிற்சி, ஒரே சம்பளம், சமமான வாய்ப்புகள், வீடுகள்  எல்லாம் கொடுக்கப்படுகிறது. இப்படி பல சலுகைகள் சமமாகக் கொடுக்கப்படும் போது, பெண்களின் இதுபோன்ற பிரச்சனைகளைச் சொல்லி புலம்பிக் கொண்டே இருப்பது சரியாக இருக்காது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த அறிவிப்பை பெண் காவலர்கள் ஏற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் சம்பளக் குறைப்புக்கும் வாய்ப்புகள் உள்ளன, சிறிய வட்டத்திற்குள்ளேயே பெண் காவலர்களை சுருக்கி விடுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில், தற்கொலைப்படையைச் சேர்ந்த தாணுவைத் தடுத்து நிறுத்தியது தன்னுடைய தோழியான பெண் காவலர் தான் என்றும், ராஜீவ் அனுமதிக்கச் சொன்னதால் தான் அவர் கடந்து சென்றார் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். முதல்வர் பாதுகாப்பு சமயத்திலும், பெண் காவலர்கள் இருந்தால் தான் கூட்டமாக பெண்கள் வரும் போது சோதனை செய்ய முடியும் என்று கூறியிருக்கிறார்.