சென்னை ஐஸ்-அவுஸ் பகுதியில் நூதனமான முறையில் வங்கி முகவரிடம் ரூ.90 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

சென்னை முகப்பேரில் வசித்து வருபவர் ஆல்வின் ஞானதுரை. இவர் தனியார் வங்கியில் முகவராக பணிபுரிந்து வந்தார். இவர் தான் வேலைபார்க்கும் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யும்படி பொதுமக்களிடம் சென்று பேசி பணத்தை வாங்கி அவர்களின் கணக்கில் செலுத்துவது வழக்கம். வங்கியின் சார்பில் இதற்கு கமிஷன் தொகை கிடைக்கும். இவ்வாறு பொதுமக்கள் 70 பேரிடம் வசூலித்த மொத்த தொகை ரூ.90,00,000 வங்கியில் செலுத்த ஏற்பாடு செய்தார்.

அப்போது சென்னை ஐயப்பன் தாங்கலில் வசித்து வருபவர் மதபோதகர் பாலன், தூத்துக்குடி தனியார் நிதி நிறுவன இடைத்தரகர் வேலாயுதம் இருவரும் ஆல்வின் ஞானதுரைக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் நவாஷ் என்பவரிடம் ரூ.90 லட்சத்தையும் கொடுத்தால், அதற்கு அதிக வட்டியும், அதிக கமிஷன் தொகையும் பெற்று தருவதாக ஆசை காட்டினர்.

அவர்களை நம்பிய ஐஸ்-அவுஸ் பகுதியில் உள்ள நவாசின் அலுவலகத்திற்கு அழைத்து சென்று ரூ.90 லட்சம் பணத்தை நவாசிடம் கொடுத்துள்ளார். நவாஷ் திடீரென பணத்துடன் மாயமாகி விட்டார்.

இதற்கு பாலன், வேலாயுதம் ஆகியோரும் உடந்தை எனவும், நவாசை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என ஆல்வின்ஞானதுரைபோலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீவிர தேடுதல் வேட்டையில் பாலன், வேலாயுதம் , ஹசன்காதர் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.12.40 லட்சம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதிப் பணத்துடன் தப்பி ஓடிய நவாசை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.