கொட்டித்தீர்த்த கனமழை! முடங்கியது கோவை!

 

கோவையில் நேற்று பெய்த கனமழையால் மாநகரின் முக்கிய இடங்கள் நீரில் தத்தளித்தன. இதையடுத்து 2 மணி நேர பெய்த மழைக்கே மாநகரம் முடங்கியது என்றால் தொடர்மழையை கோவை தாங்குமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கோவையில் நேற்று மதியம் சுமார் 2 மணி நேரத்திற்கு பலத்த கனமழை பெய்தது. கோவை மாநகரத்தின் ரயில் நிலையம், காந்திபுரம், இடையர்பாளையம், டவுன்ஹால், பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்ததில் போக்குவரத்து முடங்கியது.

மாநகரில் உள்ள கிக்கானி மேம்பாலம், உப்பிலிபாளைய மேம்பாலம் ஆகியவை நிரம்பியதில் கார் ஒன்று மாட்டிக்கொண்டது. அதை பின்பு தீயணைப்புத் துறையினர் மீட்டனர். அதேபோல் அரசு மருத்துவமனை அருகே இருக்கும் ரயில்வே பாலத்திலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நீர் நிரம்பி காணப்படுகிறது. இதில் வந்த மாநகர பேருந்து ஒன்று பயணிகளுடன் நடுவழியில் நின்று மாட்டிக்கொண்டது. இதனையடுத்து பயணிகள் அனைவரும் நீரில் இறங்கி சிரமத்துடன் பாலத்தை கடந்து சென்றனர். இதைப்போல் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் பாதிப்பு உள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டது.

இந்நிலையில் சுமார் 2 மணி நேர மழைக்கே கோவை மாநகர முடங்கியது எனில், தொடர் மழை பெய்தால் என்னவாகும் என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் அரசு நிரந்தர தீர்வு காண உடனடியாக நடவடிக்கை வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.