கோயம்புத்தூரில் மண்ணின் வளத்தை அறிந்து கொள்ள மண் பரிசோதனை திட்டம் அறிமுகம்!

 


கோயம்புத்தூரில் நாளுக்கு நாள் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மண்ணின் வளத்தை முழுமையாக அறிந்து கொண்டால் மட்டுமே அதற்கேற்ப பயிர் சாகுபடி செய்யமுடியும். அப்போது தான் அதிக மகசூல் பெற முடியும்.


கோவை மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களிலும் மண்வள இயக்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் கீழ் ஒவ்வொரு உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு தலா 100 மண் மாதிரிகள் வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.அதன்படி கோவை மாவட்டத்தில் 6,600 மண் மாதிரிகள் எடுக்கப் பட்டு மண் பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மண்ணின் தரத்திற்கு ஏற்ப விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்படும். இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் மண் மாதிரி சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. மண்பரிசோதனை செய்து உரமிட்டால் உரச்செலவை குறைப்பதுடன் அதிக மகசூலும் பெறமுடியும் எனவும், விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மண்பரிசோதனை செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .