விஜயதசமிக்கு கோவில்கள் திறக்கப் படுமா? முதல்வர் ஆலோசனை!

 


தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது.
நவராத்திரி நாட்களாக இருப்பதால் கோவில்களை திறக்க தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் கோவையில் வசித்துவரும் ஆர்.பொன்னுசாமி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.


அதில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொற்று குறைய தொடங்கியதும், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வந்தன.அதில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் பண்டிகையான நவராத்திரி நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


அக்டோபர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழக அரசின் உத்தரவு படி அன்று பக்தர்களுக்கு கோவில்களில் அனுமதி கிடையாது. ஆகவே விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களை திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் விஜயதசமிக்கு கோவில்களை திறப்பது குறித்து முதல்வர் நாளை வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கோவில்கள் திறப்பு குறித்து அரசே முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.