தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா? காத்து கிடக்கும் பயணிகள்!

 


தமிழகத்தில் தீபாவளி நவம்பர் 4 ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான முன்பதிவும் தொடங்கி நடந்து வருகிறது.
ஆனால் தென்னக ரயில்வே இதுவரை தீபாவளி சீசன் சிறப்பு ரயில்களை அறிவிக்கவில்லை இதனால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் .


சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வழக்கமான தினசரி ரயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ் , பொதிகை , முத்துநகர், கொல்லம் எக்ஸ்பிரஸ் என 10க்கும் மேற்பட்ட தினசரி ரயில்களும், வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்களில் தீபாவளி முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் புக் செய்யப்பட்டு விட்டன.
இந்நிலையில் தாம்பரம்-நாகர்கோவில் இடையே அறிவிக்கப்பட்ட தீபாவளி சீசன் சிறப்பு ரயிலிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்து விட்டன.


தென்னக ரயில்வே உடனடியாக தீபாவளி சீசன் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில், பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதற்கும் மேல் பேருந்து கட்டணம் தாறுமாறாக இருக்கும். இதனால் ரயிலில் பயணம் செய்வதையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.


கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் மதுரை மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கோவையில் இருந்து பொள்ளாச்சி வழித்தடத்தில் மதுரை உட்பட தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். அதே போல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டால் பொதுமக்கள் பெரும் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.