உயிரைப் பறித்த செல்போன் கேம்! அம்மா திட்டியதால் மகன் தற்கொலை!

 

திண்டுக்கல் அருகே செல்போனில் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி புளியம்பட்டியில் சின்ன கண்ணு, அழகம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். சின்ன கண்ணு சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். மூத்த மகனுக்கும், மகளுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் அழகம்மாள் இளைய மகன் செல்லத்துரையுடன் தனியாக வசித்து வருகிறார். அரசுப்பளிளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் செல்லத்துரை, ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போன் வாங்கியுள்ளார். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெற்று வரும் நிலையில், செல்போன் கேம்களுக்கு அடிக்ட் ஆன செல்லத்துரை படிப்பில் கவனம் செலுத்தாமல், சதா செல்போனிலேயே கேம் விளையாடி வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அழகம்மாள் செல்லத்துரையை கண்டித்துள்ளார்.

அம்மா திட்டியதால் மனமுடைந்த செல்லத்துரை தற்கொலை செய்யும் முயற்சியில் விஷத்தன்மை கொண்ட கண்வலிகிழங்கு விதைகளை சாப்பிட்டுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக கொண்டு சென்றுள்ளனர். ஆனால், செல்லத்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்போன் கேமுக்காக சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.