வைகை அணையின் கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தேவையான நீரை வழங்கி வரும் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக உயர்ந்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 68.44 அடியாகவும், அணைக்கான நீர்வரத்து 1,011 கன அடியாகவும், நீர் திறப்பு 769 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5,430 மில்லியன் கன அடியாக உள்ளது. இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் கரையோரம் உள்ள மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணையில் உள்ள அபாய சங்கு 2 முறை ஒலிக்கப்பட்டது. 69 அடியாக உயர்ந்தவுடன் உபரியாக தண்ணீர் திறக்கப்படும் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.