அசத்தல்!! மாநகராட்சி பள்ளி சமையலறைக்கு ISO தரச்சான்று!! எந்த மாவட்டம் தெரியுமா?

 

மாநகராட்சி பள்ளியின் சமையலறைக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியின் சமையற் கூடம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதை கண்ட தலைமை ஆசிரியை மாலா, அதை சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.

அதன்படி சமையற் கூடம் முழுவதும் டைல்ஸ் ஒட்டப்பட்டு, புதிய வர்ணம் பூசி மாற்றப்பட்டது. அதேபோல சமையலுக்கு தேவையான எவர்சில்வர் மற்றும் மண் பாத்திரங்களை மாணவர்களின் பெற்றோர்கள் கல்விச் சீராக பள்ளிக்கு வழங்கினர்.

தலைமை ஆசிரியர் மாலா

ஆர்.ஓ தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டு, அதில் கிடைக்கும் தண்ணீரை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர் மாலா உத்தரவிட்டார். மேலும் சமையலர் அனைவரும் நகங்கை முறையாக வெட்டி இருக்க வேண்டும், சூடான மஞ்சள் நீரில் காய்களை கழுவிய பிறகே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். வளையல் மற்றும் மோதிரங்கள் அணிந்து இருக்கக்கூடாது என்றும் முடி உணவில் விழாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்து தான் சமைக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.

இந்த சமையற் கூடத்தின் செயல்பாடுகளை கவனிக்க தனியாக ஆசிரியர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மளிகை பொருட்கள், சமையலுக்கு தேவைப்படும் தானியங்கள், சமையலருக்கான ஊதியம் உள்ளிட்ட விபரங்களை கவனிப்பார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக சமையல் செய்யப்படும் இடத்திலும் வெளியிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற சமையற் கூடம்

இதன்மூலம் ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி சமையற் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று கிடைத்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக மாநகராட்சி பள்ளி சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ சான்று கிடைப்பது இதுவே முதல்முறை. மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட தலைமை ஆசிரியர் மாலாவுக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.