நவம்பர் 1 முதல் என்ஜினீயரிங் முதலமாண்டு வகுப்புக்கள் தொடக்கம்! அண்ணா பல்கலைக்கழகம்!

 


தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான 4 கட்ட கலந்தாய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 5 வது கட்ட துணை கலந்தாய்வுகள் இன்று முதல் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவது குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் முழுநேர பி.இ., பி.டெக். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1 முதல் தொடங்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த வகுப்புக்களில் முதலில் 2 வாரங்களுக்கு மாணவர்களுக்கு அடிப்படை கல்விகள், கற்றல் செயல்பாடுகள்,புத்தாக்க பயிற்சிகள் மட்டுமே நடத்தப்படும். நவம்பர் 15 முதல் படிப்புக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் தொடங்கப்படும். முதல் செமஸ்டருக்கான கடைசி வேலைநாள் 2022 மார்ச் 1ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் செமஸ்டர் தேர்வு மார்ச் 7 முதல் தொடங்கும். முதல் செமஸ்டருக்கான முதல் மதிப்பீட்டு தேர்வு டிசம்பர் 23 முதல் ஜனவரி 3க்குள் நடத்தப்படும். 2ம் மதிப்பீட்டு தேர்வு பிப்ரவரி 15முதல் 24க்குள் நடத்தப்படும்.


அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் நவம்பர் 1முதல் வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சிகள் நேரடியாக அளிக்கப்பட வேண்டும் எனவும், படிப்புக்கான வகுப்புகள் இட வசதிக்கு ஏற்ப நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நடத்திக் கொள்ளலாம் என கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.