பாஜகவின் விஷமத்தனம் நாட்டுக்கு நல்லதல்ல! கொதித்தெழும் அதிமுக !!

 


மத்தியில் ஆளும் பாஜக சமீபத்தில் எல். முருகனை மத்திய அமைச்சராக அறிவித்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கொங்குநாடு, தமிழ்நாடு என கூறப்பட்டிருந்த நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவினர் கொங்குநாடு அமையும் அதற்கான முயற்சி தொடங்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். எனினும் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக இது குறித்து எதுவும் பேசாமல் இருந்து வந்தது. இந்நிலையில், கொங்குநாடு தனி மாநிலம் என்ற விஷமத்தனமான சிந்தனை நாட்டுக்கு நல்லதல்ல என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கிருஷ்ணகிரியில் இது குறித்து பேசிய அவர் மிகப்பெரிய தொலைநோக்குப்பார்வை கொண்ட பேரரறிஞர் அண்ணாவே நாட்டின் நலனுக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் திராவிட நாடு என்ற கோரிக்கையை கைவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், கொங்குநாடு தனி மாநிலம் என்பது விஷமத்தனமான சிந்தனை.


கொங்குநாடு தனி மாநிலம் என யார் முன்னிறுத்தினார்களோ அவர்களே அவ்வார்த்தை பயன்பாட்டை தவிர்ப்பது நாட்டுக்கு நல்லது. நாடு வளமாக இருப்பதே முக்கியம். சிறுசிறு மாநிலங்களாக பிரிந்தால் நாட்டின் பலம் குறையும். சென்னை முதல் குமரி வரை உள்ள மக்கள் இது தமிழ்நாடு என்ற ஒரே சிந்தனையோடு உள்ளனர், மக்கள் மனதில் தேவையற்ற விதைகளை விதைப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.