உணவுப் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு செக்! பரபர தகவல்கள்!

 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் சிறுவர்கள் லக்ஷ்மன் சாய், ஓமேஷ்வர்.இவர்கள் இருவரும் கடையில் குளிர்பானத்தை வாங்கி குடித்தனர். உடனே மயக்கம் வருவதாக கூறினர். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் தொடர் ரத்த வாந்தி எடுத்தனர். இதனையடுத்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.


மருத்துவர்கள் குளிர்பானம் குறித்த தகவலை உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தெரிவித்தனர். இந்த குளிர்பானம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த பொருட்களை தயாரிக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள தொழிற்சாலை மற்றும் திருவள்ளூரில் அலமாதியில் இருக்கக்கூடிய குடோன்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன.


தமிழகத்தில் 10 ரூபாய் குளிர்பான பாட்டில் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்த குளிர்பானத்திற்கு முறையான அனுமதி பெறவில்லை. சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளிலும் அங்கீகாரம் இல்லாத தரமற்ற குளிர்பானங்கள் விற்பனை குறித்த தகவல்கள் பரிசோதனை செய்யப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே சிறுமி ஒருவர் இதே போன்ற குளிர்பானம் குடித்து உயிர் இழந்த நிலையில் தற்பொழுது மேலும் இரு சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.