கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு! கோமாவால் பாதிக்கப்பட்ட மகனுடன் பெண் தர்ணா !

 


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவருக்கு வயது 38. இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா . இவரது மகன் ஹரியின் வயது 16. இவர் 2018ம் ஆண்டு மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டு கோமாவில் உள்ளார். குழாய் மூலம் உணவு செலுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில், கோமாவில் உள்ள மகனுக்கு பராமரிப்பு செலவுக்கு அரசு நிதி வழங்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகின்றனர். அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனாவால் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மஞ்சுளா, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் அதிகாரிகள் மஞ்சுளாவிடம் விரைவில் ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

மேலும் தாசில்தார் மூலம் இலவச வீட்டுமனைபட்டா வழங்கவும் உறுதி அளித்ததன் அடிப்படையில் மஞ்சுளா மகனுடன் வீட்டிற்கு சென்றார். கோமா நிலையில் உள்ள மகனை கலெக்டர் அலுவலகத்திற்கு தூக்கிக் கொண்டு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.