மனதை கொள்ளை கொள்ளும் குறிஞ்சி பூ! படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

 


நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைகளின் இளவரசியாக கொண்டாடப்படுகிறது. இங்கு அமைந்திருக்கும் தாவரவியல் பூங்காவில் பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதனை சுற்றுலாப் பயணிகளும் கண்டு களிக்கும் வகையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


இத்துடன் பல்வேறு நாடுகளின் கள்ளிச்செடிகள், பெரணி செடிகள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்களும் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது ஊட்டியில் 2வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த சீசனுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அழகு செடிகள், வண்ண மலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான மலர் செடிகள் 12000 பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தாவரவியல் பூங்காவில் இத்தாலியன் பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கியுள்ளன.பாறைகளின் நடுவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் காண்பவர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.

அசைந்து ஆடும் குறிஞ்சி பூவின் அழகை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குறிஞ்சி மலரை கண்ட சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தங்களது செல்போன் மற்றும் கேமிராக்களில் செல்பிக்கள் மூலம் நினைவுகளை படம் பிடிக்கின்றனர். இதனால் ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை களைகட்டுவதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.