ரூ1,38,00,000 நகை, பணம் கடத்தல்! அதிரடியாக கைது செய்த போலீஸ்!

 

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து மாநிலங்களுக்கிடையே படிப்படியாக ரயில் சேவை மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது. அந்த வகையில் ஆந்திராவில் இருந்து வரும் கொல்லம் எக்ஸ்பிரஸ் சேவையும் செயல்பட்டு வருகிறது. அந்த ரயிலில் தங்கம், வெள்ளி ஆகியவை கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அந்த ரயிலில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அந்த ரயிலில் சேலத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 42), பிரகாஷ் (28), சுரேஷ் (35), நித்தியானந்தம் (35) ஆகியோரின் பைகளும் சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்டது. அதில் 144 கிலோ வெள்ளிக் கட்டிகள், கொலுசுகள் மற்றும் கட்டுக்கட்டாக ரூ.32,20,000 இருப்பது கண்டறியப் பட்டது. பொருட்களுக்கு போதிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த பொருட்கள் பணம் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி மற்றும் பணம் ஆகியவை சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சேலத்தை சேர்ந்த 4 பேரும் நகை பட்டறை வைத்துள்ளவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால் அவர்களிடம் எடுத்து வந்த பொருட்கள் மற்றும் பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வெள்ளி மற்றும் பணத்தை கடத்தி வந்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளியின் மதிப்பு ரூ.1,38,00,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.