மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.43 அடியாக உயர்ந்தது

 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, தமிழகத்தை ஒட்டிய கர்நாடகா மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் மற்றும் கன மழை காரணமாக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 34,144 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 34,141 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் தண்ணீர் திறப்பு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று 75.34 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 77.43 அடியானது. ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.