கொரோனா 3வது அலையைத் தடுக்க நூதன வழிபாடு!

 

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து நிபுணர்கள் மூன்றாவது அலை வரப்போவதாக எச்சரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இதைத் தடுப்பதற்கான முயற்சியில் மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜரத்தினம். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர். இவருக்கு வயது 90. இவர் தன்னுடைய தோட்டத்தில் கொரோனா கோயில் கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக, கோயிலுக்கான பெயர்ப் பலகையை நட்டு அதில் வேப்பிலை கட்டியுள்ளார்.


இது குறித்து அவர் விடுத்த செய்திக்குறிப்பில் “மின்சார வாரியத்தில் தலைமை பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். தற்போது விவசாயம் செய்து வருகிறேன். கொரோனா உலகையே ஆட்டிப்படைத்துள்ளது. கண்ணுக்கு தெரியாத அந்த வைரஸ் உலகில் பல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனால், கொரோனாவுக்கு ஒரு சக்தி இருப்பதாக உணர்கிறேன்.

முந்தைய காலத்தில் அம்மை நோய்த் தாக்கம் அதிக அளவில் இருந்தபோது, அது வழிபாடாக மாறியது. இதேபோல் தான் கொரோனாவையும் பார்க்கிறேன். அதனால் கோயில் கட்ட முடிவு செய்தேன்.விரைவில் மேடை வடிவில் கோயில் கட்ட உள்ளேன். பூஜை, வழிபாடு எல்லாம் கிடையாது. இந்த வழியாகச் செல்பவர்கள் கொரோனா கோயிலைப் பார்த்து கும்பிட்டு செல்லட்டும். அதன் மூலம் அவர்கள் பாதுகாப்பான சூழலில் வாழட்டும் என்பதற்காக இதை கட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.