அதிகாலை நிகழ்ந்த சோகம்! டெல்லியில் மரணமடைந்த ராணுவ வீரர்! தேனியில் உடல் த் தகனம்!

 

தேனி மாவட்டம், கம்பம் சின்ன வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (33). டில்லியில் உள்ள ராணுவ படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்த பிரபாகரன் நேற்று முன் தினம் பணி முடிந்து ராணுவ குடியிருப்புக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

டில்லி கண்ட் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் கிடந்த கல் மீது பைக் ஏறி, நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில், ராணுவ வீரர் பிரபாகரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது.
தகவல் அறிந்த சக வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, பிரபாகரனை மீட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பிரபாகரன் உயிரிழந்தார். இது குறித்து பிரபாகரன் மனைவி திவ்யா மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, ராணுவ படைப்பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உயிரிழந்த ராணுவ வீரர் பிரபாகரனின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

இதையடுத்து அவருடைய உடல் டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வழியாக திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று தேனி, கம்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்பு, சுருளிப்பட்டி சாலையில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பிரபாகரனின் உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ வீரர்கள் மரியாதை செய்தனர்.