வீதியில் வெடித்த வெடிபொருளால் கால் சிதைந்த இளம்பெண்! போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள் !

 

திருச்சி சமயபுரம் பகுதியில் அமைந்துள்ளது சிறுகனூர் கிராமம். இங்கு வெடிபொருள் வெடித்து சிதறியதில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கால் சிதைந்தது. இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சிறுகனூர் அருகே உள்ள ஊட்டத்தூர் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து தினமும் ஏராளமான லாரிகள் கற்களை ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மனைவி வசந்தி வயது 35. இவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது வெடிபொருள் வெடித்து வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிதைந்தது. அலறி துடித்த வசந்தியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக தற்போது திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில், அந்த வீதி வழியாக லாரியில் கற்களை கொண்டு செல்லும் போது, அதில் இருந்து கல்குவாரியில் பயன்படுத்தும் வெடிபொருள் ஏதாவது தவறி கீழே விழுந்து இருக்கலாம், வசந்தி மிதித்த போது வெடித்து இருக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். விரைவில் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்வோம் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது