கண்ல காசைக் காட்டினா உசுர காப்பாத்துவேன்!! அரக்கியாக மாறிய அரசு பெண் மருத்துவர்!!

 

திருப்பூர் அருகே அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவர் கர்ப்பிணியின் வயிற்றில் உயிரிழந்த சிசுவை அறுவை சிகிச்சை செய்து அகற்றாமல், தனது தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மடத்துக்குளம் தாலுகா காரத்தொழுவை சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற கர்ப்பிணியை கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு வயிற்று வலி ஏற்படவே உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு ராஜராஜேஸ்வரியை பரிசோதித்த ஜோதிமணி என்ற மருத்துவர் சிசு வயிற்றில் இறந்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் இறந்த சிசுவை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்றாமல் நான்கு நாட்கள் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

வலியால் துடிதுடித்த ராஜராஜேஸ்வரி அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறியதற்கு மருத்துவர் ஜோதிமணி அருகில் உள்ள ஸ்ரீவிநாயக் மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு ராஜராஜேஸ்வரியை அழைத்துச் சென்ற போது அங்கு மருத்துவர் ஜோதிமணி அறுவை சிகிச்சை செய்ய வந்துள்ளார். இதைப் பார்த்து ராஜராஜேஸ்வரியின் உறவினர்கள் குழப்பமடைந்தனர்.

அப்போது தான் மருத்துவர் ஜோதிமணி தன்னுடைய மருத்துவமனைக்கு அவர்களை வரச் சொல்லியது தெரிய வந்தது. ரூ.35,000 செலுத்தினால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து சிசுவை வெளியே எடுப்பதாக மருத்துவர் ஜோதிமணி கூறியதாக தெரிகிறது.

உயிருக்கு போராடும் ராஜராஜேஸ்வரியை காப்பாற்ற உறவினர்கள் வேறு வழியின்றி பணத்தை கட்டியுள்ளனர். இதனையடுத்து மருத்துவர் ஜோதிமணியின் செயல் குறித்து பெண்ணின் உறவினர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த விஷயம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்றது.

முதல்கட்டமாக மருத்துவர் ஜோதிமணியை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்த ஆட்சியர், இது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.