சீக்கிரம் ஸ்கூல் திறங்க! கலெக்டரிடம் மனு கொடுத்த மாணவன்!

 

‘சீக்கிரமா தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை திறக்க நடவடிக்கை எடுங்கள். ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் வகுப்புகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது’ என்று 8ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

திருப்பூரில், தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர் பாண்டிஸ்வரன். இவர், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்”கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் ஆன்லைன் வழியாகவே பாடங்கள் நடத்தப்படுகின்றன.

பல மாதங்களாக அலைபேசியில் பல மணி நேரம் வகுப்புகளை கவனிப்பதால், மாணவர்களின் கண்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதேபோல், தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளால், மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பள்ளிகளை உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.