உஷார்!! தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் கிரிவலம் செல்ல தடை!

 

திருவண்ணாமலை, சதுரகிரி மலை என ஆன்மிக தலங்களில் இன்று கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்கிறது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். இந்த கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. ஈசனே மலையாகக் காட்சி தரும் தலம். ‘நினைத்தாலே முக்தி தரும் மலை’ என்றும் சிவபக்தர்களால் கொண்டாடப்படும் சிறப்பு மிக்க தலம். இங்குள்ள 14 கி.மீ கிரி வலப்பாதையில் ஒவ்வொரு பௌர்ணமியிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் செல்வது வழக்கமாக இருந்து வந்தது.


கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இம்மாதமும் பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்து வகையில் திருவண்ணாமலையில் செப்.20, 21 தேதிகளில் பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்களை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.