புதுவையில் செப்.18ம் தேதி முழு அடைப்பு போராட்டம்!

 
செப்டம்பர் 18ம் தேதி புதுச்சேரியில், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டத்துக்கு இண்டியா கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக புதுவையில் வருடந்தோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதேபோல இந்த வருடமும் கடந்த பிப்ரவரி மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர், மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை அரசு அப்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கட்டண உயர்வை பரிசீலிக்கும்படி அரசு சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது. தற்போது மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், முன் தேதியிட்டு கடந்த ஜூன் 16ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.இதற்கு புதுவை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் நேற்று இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம்,  மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவபொழிலன் மற்றும் சிபிஐ(எம்எல்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கடசி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி வரும் செப்டம்பர் 18-ம் தேதி புதன்கிழமை இந்தியா கூட்டணி சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெறக் கோரி வரும் 18-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த உள்ளோம். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். மின்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். துணை மின் கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் இந்தப் போராட்டத்துக்கு புதுவை மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா