வங்கிக் கடன் செலுத்த கால அவகாசம் வழங்க முடியாது! உச்சநீதிமன்றம்!

 


இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா காரணமாக அடுத்தடுத்து ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மற்றும் எளிய மக்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழந்தனர். அதிலும் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் தொடங்கியவர்கள், வாகனங்கள் வாங்கியவர்கள், வீட்டுக்கடன் வாங்கியவர்கள் என அனைவருக்கும் மிக மிக நெருக்கடியான சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து வருமானம் இல்லாததால் கடன் வாங்கியவர்கள் ஈஎம்ஐ கட்டுவதற்கு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி விலக்கு அளித்தது. நிலைமை சரியாக காரணத்தால் ஊரடங்கு தொடர்ந்ததால் ஜூன், ஜூலை, ஆகஸ்டு என அடுத்த மூன்று மாதங்களுக்கும் விலக்கு அளித்தது.


தற்போது 2வது அலையிலும் ஊரடங்கு நீடிப்பதால் இஎம்ஐ கட்ட மீண்டும் அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடன் தவணைத் தொகையை திரும்ப செலுத்த அவகாசம் வழங்கக் கோரி ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.


மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கலந்து பேசி எடுக்க வேண்டிய கொள்கை முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.