ஆகஸ்ட் மாதத்தில் அதிக வருவாய் ஈட்டிய இந்திய ரயில்வே

 

கொரோனா சவால்களுக்கு இடையிலும், இந்திய ரயில்வே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவிலான சரக்குகளை ஏற்றி, அதிக வருவாயை ஈட்டியுள்ளது. கடந்த மாதத்தில் இந்திய ரயில்வே 110.55 மில்லியன் டன்கள் சரக்குகளை ஏற்றிச் சென்றது. இது கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குகளுடன் ஒப்பிடுகையில் (94.59 மில்லியன் டன்கள்) 16.87 சதவீதம் அதிகம். இதன் மூலம் இந்திய ரயில்வேக்கு கிடைத்த வருவாய் ரூ. 10,866.20 கோடி. இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வருவாயைவிட (ரூ.9,043.44 கோடி) 20.16 சதவீதம் அதிகம்.

கடந்த மாதத்தில் 47.94 மில்லியன் டன்கள் நிலக்கரி, 13.53 மில்லியன் டன்கள் இரும்புத்தாது, 5.77 மில்லியன் டன்கள் எஃகு, 6.88 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள், 4.16 மில்லியன் டன்கள் உரம், 3.60 மில்லியன் டன்கள் கனிம எண்ணெய், 6.3 மில்லியன் டன்கள் சிமெண்ட், 4.51 மில்லியன் டன்கள் மரக்கரி ஆகியவை உட்பட பல பொருட்களை இந்திய ரயில்வே ஏற்றிச் சென்றுள்ளது.

ரயில் சரக்கு போக்குவரத்தை ஈர்க்க, ஏரளாமான கட்டண சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அளிக்கப்படுகின்றன. சரக்கு ரயில்களின் வேகமும், கடந்த 19 மாதங்களில் இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தனது ஒட்டு மொத்த திறன்கள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த கொரோனா காலத்தை, ஒரு வாய்ப்பாக இந்திய ரயில்வே பயன்படுத்தியுள்ளது.