இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் டி.ஆர்.ஐ. ஆலை - ரூ.207 கோடியில் அமைக்க மத்திய அரசு திட்டம்!
எஃகு உற்பத்தித் துறையில் கார்பன் வெளியேற்றத்தைக் முழுமையாகக் குறைக்கும் நோக்கில், ஹைட்ரஜனை மட்டுமே எரிபொருளாகப் பயன்படுத்தி இயங்கும் இந்தியாவின் முதல் நேரடி குறைக்கப்பட்ட இரும்பு ஆலையை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
எஃகு உற்பத்தித் துறையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக அமைக்கப்பட உள்ள இந்த முன்னோடித் திட்டத்திற்கு மொத்தம் ரூ.207 கோடி செலவிடப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கனிமங்கள் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப நிறுவனம் (CSIR-IMMT) தலைமையில் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட உள்ளது.
நாளொன்றுக்கு 20 டன் உற்பத்தித் திறன் கொண்ட இந்தத் திட்டத்திற்கு, மத்திய எஃகு அமைச்சகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஆகியவை கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளன. உலகளவில் பல ஹைட்ரஜன் டி.ஆர்.ஐ. திட்டங்கள் உயர் தர மேக்னடைட் தாதுக்களைப் பயன்படுத்தும் நிலையில், இந்தியா தரம் குறைந்த ஹெமடைட் தாதுக்களைப் பதப்படுத்துவது இதில் ஒரு முக்கிய சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த நவீன ஆலைக்கான பணிகள் திட்டமிடப்பட்டு, வரும் 2029-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாகக் கட்டி முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் எஃகு உற்பத்தியில் கார்பன் வெளியேற்றம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.