தாயைப் பராமரிக்க ஐ.டி. வேலையை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டும் இளம்பெண்!

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தந்தையை இழந்த தனது தாயைப் பாதுகாப்பதற்காக உயர் பதவியிலிருந்த ஐ.டி. வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டிவரும் இளம்பெண்ணின் தைரியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IT) அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல வேலையில் பணியாற்றி வந்துள்ளார். தந்தையின் மறைவுக்குப் பிறகு தாய் தனிமையில் தவித்த நிலையில், ஐ.டி. துறையின் இரவுப் பணி காரணமாகத் தாயைத் கவனித்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தாயை அருகில் இருந்து கவனித்துக்கொள்ளும் நோக்கில் தனது ஐ.டி. வேலையைத் துறந்த அவர், ஆட்டோ ஓட்டும் தொழிலைத் தேர்ந்தெடுத்துள்ளார். குடும்பத்தினர் ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.

கார்ப்ரேட் வேலையைவிட இது சிறந்தது என்றும், தன் தாயுடன் அதிக நேரம் செலவிட முடிவதோடு ஐ.டி.யில் சம்பாதித்ததை விட இப்போது அதிகமாகச் சம்பாதிப்பதாகவும் அவர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளப் பிரபலம் ஒருவர் இவரது ஆட்டோவில் பயணம் செய்து வீடியோவை வெளியிட, அது இணையத்தில் வைரலானது. சரளமாக ஆங்கிலம் பேசி, சமூகத்தின் சம்பிரதாயங்களை உடைத்துத் தாயின் அன்பிற்காகத் தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்ட இந்த இளம்பெண்ணின் தைரியத்திற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.