30 நிமிடத்தில் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து? ஏன் இன்னும் அங்கீகரிக்கவில்லை? நீதிபதிகள் கேள்வி!

 

கொரோனாவை குணப்படுத்தும் 2டிஜி எனும் மருந்தை, டி.ஆர்.டி.ஓ. ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாகவும், அதை சந்தைக்கு கொண்டு வரக்கோரி சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அப்போது மத்திய அரசு தரப்பில், 2டிஜி மருந்தை உற்பத்தி செய்ய முன்வந்த 40 இந்திய மருந்து நிறுவனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணாம்பட்டினத்தைச் சேர்ந்த ஆனந்தய்யா என்பவர் கண்டுபிடித்த பாரம்பரியமான மருந்து கொரோனாவை 30 நிமிடங்களில் குணப்படுத்துவதாக வெளிவந்த செய்தியை சுட்டிக்காட்டி, அவருடைய மருந்தை ஏன் சர்வதே அளவில் சந்தைப்படுத்தக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ஆனந்தய்யாவின் மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தரப்பு விளக்கமளித்தது.

தொடர்ந்து, கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கி வரும் ஆனந்தய்யா வாழும் கடவுள் என்றும், அவருக்கு நீதிமன்றம் தலைவணங்குவதாகவும் நீதிபதிகள் புகழாரம் சூட்டினர்.

இதையடுத்து, 2டிஜி மருந்து உற்பத்தி எப்போது பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்ற விவரங்களையும், ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்படுவது குறித்தும் மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.