மும்பை கனமழை: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிதி உதவி

 

தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து மும்பையில் பலத்த மழை காரணமாக அனைத்து சாலைகளிலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த 24 மணி நேரமாக அதி தீவிர கனமழை கனமழை காரணமாக மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். ஒரே நாளில் இருவேறு சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது மும்பை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “செம்பூர் மற்றும் மும்பையின் விக்ரோலியில் சுவர் இடிந்து விழுந்ததால் உயிர் இழப்பு ஏற்பட்டதில் வருத்தம். துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்களுக்கு விரைவாக குணமடைய பிரார்த்தனை” என்று பதிவிட்டுள்ளார்

மேலும், கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி தேசிய நிவாரணத்திலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.