இதற்காக தான் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன- ப. சிதம்பரம்

 

தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என்று பிரதமர் மோடி தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், தேர்தல் தோல்வி பயத்தால் வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும் பாஜக அரசு தன்னுடைய தவறை உணர்ந்துகொண்டதாக இதை கருத முடியாது.

கடந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார்கள். அதேபோல இந்த முடிவும். விரைவில் பணமதிப்பு நீக்கம் ஒரு இமாலய தவறு என்பதையும் பிரதமர் மோடி ஒப்புக்கொள்வார் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.