புத்தமத மாண்புகள் மற்றும் கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறு குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

 

சர்வதேச பிரச்சினைகளில் புத்தமத மாண்புகள் மற்றும் கொள்கைகளைக் கடைப்பிடிப்பது, மேம்பட்ட இடமாக உலகை மாற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

சர்வதேச புத்தமத கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த வருடாந்திர ஆஷாத பூர்ணிமா- தர்மசக்கர தின நிகழ்ச்சியில் ஜூலை 24, 2021 காணொலி வாயிலாக வெளியிட்ட செய்தியில் அவர் இதனைத் தெரிவித்தார். புத்தர் அருளிய போதனைகளின் சாராம்சத்தில் நிலைத்திருப்பது மிகவும் அவசியம் என்றும், அதன் வேறுபட்ட விளக்கங்களால் பாதை மாறக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். இது சம்பந்தமாக சர்வதேச புத்தமத கூட்டமைப்பின் நோக்கங்கள் பாராட்டத்தக்கவை என்று அவர் குறிப்பிட்டார். மனித சமூகத்திற்கு சேவையாற்றுவதற்காக அனைத்து புத்த பாரம்பரியங்கள் மற்றும் அமைப்புகளுக்கான பொதுவான தளத்தை உருவாக்கிய இந்தக் கூட்டமைப்பின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

புத்தரின் வாழ்க்கை, மனித சமூகத்திற்கான விலைமதிப்பில்லா செய்திகளை உள்ளடக்கியிருப்பதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். தம்மை விமர்சிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் மீதும் பகவான் புத்தர் மிகப் பெரும் நம்பிக்கையையும் மரியாதையையும் கொண்டிருந்தார். அவர்களும் அவரைப் பின்பற்றுவார்கள். மெய்மையில் அவர் நிலைத்திருந்ததால் இந்த ஆன்மீக ஆற்றலை அவர் பெற்றார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தால் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இரக்கம், அன்பு மற்றும் சுயநலம் இல்லாத தன்மை உலகிற்கு அதிகம் தேவைப்படுகிறது. புத்த மதத்தால் உலகம் முழுவதும் பரப்பப்படும் இந்த உலகளாவிய மாண்புகளை, அனைவரும் தங்களது சிந்தனை மற்றும் செயலில் கடைப்பிடிக்க வேண்டும். புத்தரின் அளவிடமுடியாத கருணை, இன்றைய உலகிற்கு உந்துசக்தியாகவும், மனித துன்பங்களின் காரணிகளை எதிர்கொள்வதற்கான தீர்வுகளையும் வழங்கும் என்று குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதிகாலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் போதி மரக்கன்றை குடியரசுத் தலைவர் நட்டு வைத்தார். மத்திய கலாச்சார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, இணை அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் மீனாட்சி லேகி, சர்வதேச புத்தமத கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் தம்மபியா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.