கருப்பு பூஞ்சையை குணப்படுத்த ரூ 7,00,000/-! உறவினர்களின் பரிதாப நிலை!

 


தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது .மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் கருப்பு பூஞ்சை நோய் வேகமெடுத்து பரவி வருகிறது. பெங்களூருவில் ஹெப்பல் பகுதியில் வசித்து வருபவர் யாஸ்மீன்.

இவருக்கு வயது 55.இவர் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது இடது கண் வீங்கிய நிலையில் பார்வையை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய் பாதித்த பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு ரூ.8,00,000/- லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் ஒரு ஆம்போடெரிசின் தடுப்பூசிக்கு ரூ.7,448 மற்றும் அதுசார்ந்த மற்றவைக்கு ரூ.5000 வரை ஆகும். யாஸ்மீனுக்கு ஒருநாளைக்கு 3 தடுப்பூசிகள் வீதம் செலுத்த வேண்டும்.ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு ஊசிகள் மட்டுமே அவரால் அளிக்க முடிகிறது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வேலையிழந்த அவரது மகனால் தனது அம்மாவிற்கு ஆகும் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியவில்லை.


இதன் காரணமாக யாஸ்மீன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். யாஸ்மீனை மீண்டும் மருத்துவமனையில் சேர்க்க ரூ. 7,00,000/- வரை தேவை என்பதால் அவரது மகன் நிதி திரட்டி வருகிறார்.
யாஸ்மீனின் கணவரும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வாரத்துக்கு ரூ.2.5 லட்சம் செலவானது. இதனால், ஆம்போடெரிசின் மருந்துகளை அரசே இலவசமாக வழங்க வேண்டும் என ஜமீல் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதே போல ஷாரூக்கான் என்பவரும் செலவை சமாளிக்க முடியாமல் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருப்புப் பூஞ்சை நோயாளிகளுக்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
முன்னதாக, சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தனியார் மருத்துவமனைகளில் கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயித்தார். ஆனால், அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.