இன்று திருப்பதி பிரம்மோற்சவத்தில் திருக்குடைகள் பவனி!

 


திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இந்த வைபவத்திற்காக தமிழகத்தில் இருந்து 150 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதி திருக்குடைகள் திருமலையில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. பெருமாள் எழுந்தருளும்போது, ஆதிசேஷனே திருக்குடையாக அவதரிக்கிறார் என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


திருப்பதி பிரம்மோற்சவ உற்சவத்தில் தமிழக பக்தர்கள் சார்பில் இந்து தர்மார்த்த சமிதி,ஒவ்வொரு ஆண்டும் 11 திருக்குடைகளை சமர்ப்பித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை உற்சவம் அக். 3ம் தேதி பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலில் யாக பூஜைகளுடன் தொடங்கப்பட்டது.
சென்னை பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோவிலில் அக். 5ம் தேதி சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்த திருக்குடைகள் நேற்றுமுன்தினம் திருப்பதி வந்து சேர்ந்தன. அதில் 2 திருக்குடைகள் தாயார் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.


மீதமுள்ள 9 அழகிய திருக்குடைகள் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் இருந்து மாலைகளை எடுத்துவந்து திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பணம் செய்வதும் காலம் காலமாக வழக்கத்தில் இருந்து வரும் நடைமுறைகள்.


நடப்பாண்டில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு குறைந்த அளவிலேயே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் பிரம்மோற்சவத்தில் திருக்குடைகள் பவனிவர, திருமலையில் கருட சேவை உற்சவம் இன்று அக்டோபர் 11ம் தேதி திங்கட்கிழமை இரவு நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.