கொரோனாவிலிருந்து மீண்டவர்களே அலட்சியம் வேண்டாம்! நிபுணர்கள் எச்சரிக்கை!

 

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிக திவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்புக்களும் , உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

மருந்துகள், ஆக்சிஜன், படுக்கைகளுக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடுகள் ஏற்படத் தொடங்கியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டுவருவது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.

திடீரென்று உடல்நிலை மோசமாகி நம்மைவிட்டு மறையும் அவலநிலை அதிகரித்து வருகிறது. கொரோனா வராது என்று அலட்சியமாக வெளியில் நடமாட வேண்டாம்.

காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், ருசியின்மை, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக இருந்து விட வேண்டாம். உடனே பரிசோதனை செய்து பாசிடிவ் என்று வந்தாலோ, தொடர் காய்ச்சல், உடல் வலி 10 நாட்களுக்கு மேலாக இருந்தாலோ சிகிச்சை எடுக்காமல் இருப்பதுதான் உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாகி விடலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்பவர்கள் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைத்த நாள் வரை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு முறை தொற்று ஏற்பட்டாலே நுரையீரல் பலவீனமாக இருக்கும். குணமான பலருக்கும் மாரடைப்பு வருவதாக பகீர் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி சிகிச்சையில் குணமடைந்தவர்களும் கூட சில மாதங்களுக்காவது மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். அதாவது குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்வது, மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது, நெஞ்சு வலி போன்ற அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது என எச்சரிக்கை விடுக்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.