கோகுலாஷ்டமி ஸ்பெஷல் ரெசிபி! அவல் பாயாசம்!

 

வட இந்தியாவில் மட்டுமல்லாமல், தமிழகத்திலும் கிருஷ்ண ஜெயந்தியை கோலாகலமாக கொண்டாடுகிறோம். கிருஷ்ணர் இரவில் பிறந்தார் என்பதால், அந்தி சாயும் வேளையில் பூஜையை செய்வது நல்லது. வீட்டின் வாசலில் கோலமிட்டு, செம்மண் இட வேண்டும்.

கண்ணனை குழந்தையாகவே பாவிப்பதால், சின்னச் சின்னப் பாதங்களை வாசலிலிருந்து இல்லத்தின் உள்ளே வருவது போல பாதங்களையே கோலமாக வரைந்து பூஜையறை வரையில் கொண்டு செல்லலாம். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து வழிபாடு செய்திட நம் வேண்டுதல் உடனே நிறைவேறும் என்பது ஐதிகம். அந்த வகையில் அவல் பாயாசம் செய்முறையை பார்க்கலாம்.


அவல் பாயாசம்


தேவையான பொருட்கள் :


கெட்டி அவல் – 200கி
வெல்லம் -100கி
பால் – 100மிலி
ஏலக்காய் – 1
முந்திரி – 5
நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை :
வாணலியில் மிதமான தீயில் முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். அதே நெய்யில் அவலை போட்டு பொரிந்து லேசாகும் வரை வறுக்கவும்.பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்ச வேண்டும்


பால் நன்றாக கொதித்து சுட்டி வரும் போது வறுத்த அவல், மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் பால் வற்றி, அவல் வேகும் வரை வைக்கலாம். 1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை போட்டு கரையும் வரை சூடேற்ற வேண்டும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, வெந்த அவலில் சேர்த்து கலக்கவும்.

ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து கலந்து இறக்கி விடலாம். வெல்லம் சேர்த்த பிறகு, 1 நிமிடத்தில் பாயசத்தை இறக்கிவிட வேண்டும். அட்டகாசமான சுவையில் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த அவல் பாயாசம் தயார்.