அதிர்ச்சி!தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு !

 


தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. அத்துடன் தேர்தல்நெருக்கடிகள், கொரோனா என ஏற்கனவே மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அரசியல் பிரச்சாரங்கள் பொதுமக்களை திகைப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன. ஒருவரும் மிச்சம் வைக்காமல் சகட்டு மேனிக்கு தரம் தாழ்ந்து எல்லோரையும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சரி.. விஷயம் தேர்தலைப் பற்றினதல்ல. பால், பெட்ரோல், சமையல் எரிவாயு என்று விலையேற்றியது போதாதென்று தமிழகம் முழுவதும் சுங்க சாவடி கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள். நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கும் வந்தது.

இந்த புதிய கட்டண உயர்வு சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கப்பலூர், சாத்தூர் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்படுகிறது. பாஸ்ட் டேக் இல்லாத வாகனங்களுக்கு இந்த கட்டண உயர்வும் இரு மடங்காக இருக்கும் என்று தெரிகிறது. ஏற்கெனவே சுங்கசாவடி கட்டணம் அதிகமாக இருப்பதாக வாகன ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் புலம்பி வரும் நிலையில், தற்போது மேலும் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இந்த 26 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் 5 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு 80 ரூபாயாக இருந்த கட்டணம் 5 ரூபாய் உயர்த்தப்பட்டு 85 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கும், பேருந்துகளுக்கும் 270 ரூபாய் இருந்த கட்டணம் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 290 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று அச்சு கனரக வாகனங்களுக்கு 295 ரூபாயாக இருந்த கட்டணம் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 315 ரூபாயாக உள்ளது. மூன்று முதல் ஆறு அச்சு கொண்ட கனரக வானங்களுக்கு 425 ரூபாயாக இருந்த கட்டணம் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 450 ரூபாயாக உள்ளது. 7 மற்றும் அதற்கு மேல் அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கு 520 ரூபாயாக இருந்த கட்டணம் 30 ரூபாய் உயர்த்தப்பட்டு 550 ரூபாயாக உள்ளது.

கொரோனா கால பொருளாதார நெருக்கடியில் இருந்து இப்போது தான் பொதுமக்கள் சற்று மீண்டுள்ள நிலையில் கொரோனா இரண்டாவது அலை என்கிற பீதியில் உள்ளனர். தங்களது அடிப்படை வாழ்வாதாரமே பாதிக்கப்பட்ட நிலையில், இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளில் இப்போதே கூட்டமில்லை. இந்நிலையில், பேருந்து கட்டணங்கள் இன்னும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dinamaalai.com