உஷார்!! இவங்க எல்லாம் கொரோனா குறித்து அதிக எச்சரிக்கையா இருக்கணும்!

 

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்த போதிலும் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவது குறித்து மக்களிடையே அச்சம் பரவி உள்ளது. இது குறித்து செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணர் தலைமையிலான மருத்துவர்கள் குழு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் உடல்பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு கொரோனா வந்தால் அதிக ஆபத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். பொதுவாக உடல் பருமன் என்பது, செழிப்பான வாழ்க்கையை குறிக்கும். ஆனால் உடல் பருமன் பல்வேறு வகையான புற்றுநோய்களை உருவாக்கி விடலாம். ஈரலைச் சுற்றி கொழுப்பு சேர்வதன் மூலம் செரிமான பிரச்சினைகள் உட்பட பல்வேறு வகையான நோய்களுக்கு ஆரம்பமாக அமைந்துள்ளது. இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பீட்சா, பர்கர் என எப்போதும் கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதால் இந்த நோய்க்கு ஆளாக நேரிடுகிறது.பொதுவாகவே உடல் பருமனால் 49 சதவீதம் இதய நோய்கள், 38 சதவீதம் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள், 19 சதவீதம் புற்றுநோய் ஏற்படலாம் என ஆய்வறிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன.

சாதாரணமாக பாதிக்கப்படுபவர்களை விட உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குத்தான் கொரோனா தொற்று, உயிருக்கு அதிக ஆபத்தை உருவாக்குவதாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தரவுகள் தற்போது கிடைத்து வருகின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவு, வென்ட்டிலேசன் ஆகிய சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படும் வாய்ப்புக்கள் அதிகம்.

பரம்பரை, பிறப்பு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றோடு , அதிக கார்போஹைட்ரேட் உணவுகள், அதிக கொழுப்புள்ள உணவுகள் இவற்றோடு வெள்ளை சர்க்கரை, ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், கேக்குகள் இவை அனைத்துமே உடல் பருமனுக்கு ஏதுவாக உள்ளன.
உடல் பருமனில் இருந்து விடுபட சைக்கிளிங், நடைப்பயிற்சி போன்ற எளிய உடல் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டாலே போதும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.