நாளை மிஸ் பண்ணாதீங்க… கேட்ட வரம் தரும் வைகாசி கிருத்திகை!

 

முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் கார்த்திகை. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திர நாளில் அனுஷ்டிக்கப்படுவது இந்த கிருத்திகை விரதம். கிருத்திகையில் விரதமிருந்து ஆறுமுகனை வழிபட்டால் வாழ்வில் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனால் தாம் முருகனுக்கு உகந்த எல்லாவற்றிலுமே 6 முக்கிய பங்கு வகிப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

‘சரவணபவ’ மந்திரத்தை ஆறு எழுத்து மந்திரமாகவும், முருகனை ‘ஆறுமுகக்கடவுளாக’வும் வழிபடுகிறோம். சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறுமுகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை திருநாள் கொண்டாடப் படுகிறது.
இந்த நாளில் முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து மாதம் தோறும் விரதம் இருப்பவர்கள் இம்மையில் வளமான வாழ்வையும், பிறப்பில்லா பேரின்ப நிலையையும் அடைவர் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. அத்தனை சக்தி வாய்ந்தது இந்த கார்த்திகை விரதம். அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நடத்தப்படும்.

செவ்வாயின் அம்சமாக கருதப்படுபவர் முருகப் பெருமான். அதனால், செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடைகள், செவ்வாய் தோஷ தடை, புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குருதிசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் இந்த தினத்தில் முருகனை மனதார பிரார்த்தனை செய்திட தோஷங்கள் நீங்கப்பெறலாம். கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க கவலைகள் பறந்தோடும். செவ்வாய்க்கு உகந்த தினமான செவ்வாய்க் கிழமையிலேயே கிருத்திகை அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. அதிகாலையில் எழுந்து, நீராடி, அருகில் இருக்கும் கந்தனின் ஆலயத்திற்கு செல்வோம்.கஷ்டங்கள், கவலைகள் மறப்போம் .