டிரம்பைக் கொன்றால் 100 மில்லியன் டாலர் பரிசு... ஈரானில் வைக்கப்பட்ட பேனரால் பெரும் பரபரப்பு!
வளைகுடாப் பகுதியில் அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு 100 மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவிக்கும் பிரம்மாண்ட பதாகை ஈரானில் வைக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சத் தலைவர் அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்டனர். இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்ததால், அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் பல முறை ஒத்தி வைக்கப்பட்டன.
நீண்ட தாமதத்திற்குப் பிறகு, அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் கடந்த ஜூலை 4-ம் தேதி தொடங்கின. கருப்பு உடையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு கோஷங்களை முழங்கியபடி இதில் கலந்து கொண்டனர். புனித நகரமான கோம் வழியாகச் செல்லும் இந்த இறுதி ஊர்வலம், இறுதியாக மஷ்ஹத் நகரைச் சென்றடைந்து, வரும் ஜூலை 9 ஆம் தேதி காமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்ற ஈரானின் தீவிர ஆதரவாளர்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை பிரிவினர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைப் பழிவாங்கப் போவதாகப் பகிரங்கமாக முழக்கமிட்டனர்.
காமேனியின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் முன்பாக, டிரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் முகங்களில் துப்பாக்கியால் குறிவைக்கப்பட்டு, ஆங்கிலத்தில் "டிரம்பைக் கொல்லுங்கள் - $100 மில்லியன் டாலர் ஈரானிய பரிசுத் தொகை" என்று எழுதப்பட்டிருந்த ராட்சத போஸ்டர்களைக் கூட்டத்தினர் ஏந்திச் சென்றனர்.
டிரம்பின் உருவ பொம்மையைத் தூக்கிலிட்டும், அவரது போஸ்டர்கள் மீது கற்களை வீசி எறிந்தும் மக்கள் தங்களது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் "இனி ரத்தம் தான் பதிலடி" (There will be blood), "Wanted" போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களும் ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்டன.
இதன் உச்சகட்டமாக, ஈரானின் புனித நகரமான கோம்-ல், டிரம்பைக் கொல்பவருக்கு 100 மில்லியன் டாலர் வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான பேனர் அமைக்கப்பட்டுள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இறுதிச் சடங்கிற்காக அலி காமேனியின் உடல் கோம் நகருக்குக் கொண்டு வரப்பட்டபோது இந்த அதிகாரப்பூர்வமற்ற பதாகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பதாகையை அங்கு அமைத்தது யார் என்பது குறித்தோ, அல்லது இது ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா என்பது குறித்தோ ஈரான் நாட்டு அதிகாரிகள் உடனடியாக எந்தவொரு விளக்கமோ அல்லது கருத்தோ தெரிவிக்கவில்லை. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் போர்ச் சூழல் மேலும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.