10 பதக்கங்கள்... காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியா புதிய வரலாற்று சாதனை!

 

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வந்த 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய குத்துச்சண்டை அணி 7 தங்கம் மற்றும் 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களைக் கைப்பற்றித் தன் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன் 2018 கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் 3 தங்கம் உட்பட 7 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் முந்தைய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது இந்தியக் குத்துச்சண்டை வீரர்கள் முற்றிலும் முறியடித்துள்ளனர்.

இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகள் இறுதிப் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 தங்கப் பதக்கங்களைச் சொத்தாக்கிக் கொண்டனர். பிரீதி பவார் (54 கிலோ): கனடாவின் ஸ்கார்லெட் டெல்காடோவை 5-0 என்ற கணக்கில் ஒருதலைப்பட்சமாக வீழ்த்தி, இந்தியாவின் தங்க வேட்டையைத் தொடங்கி வைத்தார். ஜெயிஸ்மின் லம்போரியா (57 கிலோ) வட அயர்லாந்தின் நடப்பு சாம்பியன் மைக்கேலா வால்ஷை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபாரத் தங்கம் வென்றார். சாக்சி சவுத்ரி (51 கிலோ) இங்கிலாந்தின் ரூபி வைட்டை வீழ்த்தித் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். பிரியா கங்காஸ் (60 கிலோ) ஆரம்பச் சுற்றில் பின்தங்கிய நிலையிலும் மீண்டு வந்து, கனடாவின் மேரி-படூல் அல்-அஹ்மதியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். அருந்ததி சவுத்ரி (70 கிலோ) இங்கிலாந்தின் சான்டெல்லே ரீடை 5-0 என்ற கணக்கில் வீழ்த்திச் சிறப்பான முறையில் தங்கம் வென்றார்.

ஆண்கள் பிரிவிலும்  சச்சின் சிவக் (60 கிலோ)  நமீபியாவின் ட்ரையாகைன் என்டெவெலோவுக்கு எதிரான விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், முதல் சுற்றில் பின்தங்கினாலும் இறுதியில் 3-2 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்றுத் தங்கம் வென்றார். அங்குஷ் பங்கால் (70 கிலோ) இங்கிலாந்தின் டிமேஜி ஷிட்டூவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்தியாவின் 7-வது தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.

தங்கத்தை நூலிழையில் தவறவிட்டாலும், தங்களது அசாத்தியப் போராட்ட குணத்தால் 3 இந்திய வீரர்கள் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர். லோவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) ஆஸ்திரேலியாவின் எம்மா-சூ கிரீன்ட்ரீயிடம் கடுமையாகப் போராடி வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஜடுமணி சிங் (55 கிலோ) ஆஸ்திரேலியாவின் ஜெய் டிக்சனிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். நரேந்தர் பெர்வால் (+90 கிலோ) இங்கிலாந்தின் டமர் தாமஸிடம் வீழ்ந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஒரே தொடரில் 7 தங்கங்கள் உட்பட 10 பதக்கங்களை அள்ளியதன் மூலம், சர்வதேசக் குத்துச்சண்டை அரங்கில் இந்தியாவின் ஆதிக்கம் மீண்டும் ஒருமுறை உலகளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.