வேலூரில் அரசு பெண் அதிகாரியிடம் 10 சவரன் சங்கிலி பறிப்பு!

 

வேலூரில் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அரசு பெண் அதிகாரியிடம் 10 சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்ற இருவரை, சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் விரைந்து கைது செய்துள்ளனர்.

வேலூரை அடுத்த துத்திப்பட்டைச் சேர்ந்த அரசு பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரியான கமீலா மஞ்சுளா (54), கடந்த 25-ம் தேதி மாலை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். சிவராமபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அவரைப் பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவரது கழுத்திலிருந்த 10 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்துப் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆய்வாளர் ராஜன் பாபு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட லத்தேரி அடுத்த குக்களப்பள்ளியைச் சேர்ந்த கிரிடரசன் (21) மற்றும் காட்பாடி அடுத்த எல்.ஜி புதூர் பகுதியைச் சேர்ந்த திவாகர் (19) ஆகிய இரு இளைஞர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட 10 சவரன் தங்கச் சங்கிலியும் முழுமையாக மீட்கப்பட்டது.