ஏஐ அச்சுறுத்தல் இல்லாத 10 பணிகள்... ஸ்ரீதர் வேம்புவின் பட்டியல்!
செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் என்ற அச்சம் உலகளவில் நிலவி வரும் நிலையில், சோஹோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு, ஏஐ அச்சுறுத்தல் இல்லாத 10 முக்கியமான பணிகளைப் பட்டியலிட்டுள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு தனது பதிவில், அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலைகளைக் காட்டிலும், மனித உணர்வுகளோடும் சமூகத்தோடும் தொடர்புடைய பணிகளுக்கு இனி வரும் காலங்களில் மதிப்பு கூடும் என்று தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களை வளர்க்கும் பணிக்கு ஏஐ மாற்றாகாது. இயந்திரங்கள் தகவல்களைத் தரலாம், ஆனால் ஒரு ஆசிரியரால் மட்டுமே ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் போதிக்க முடியும். வயதானவர்களுக்குத் தேவைப்படும் அன்பும், அரவணைப்பும் மனிதர்களால் மட்டுமே சாத்தியம். நிலத்தோடு இணைந்து உழைக்கும் விவசாயப் பணிகளில் மனிதர்களின் நேரடிப் பங்களிப்பு என்றும் தேவை.
இயற்கையைப் பாதுகாப்பதிலும், காடுகளைப் பராமரிப்பதிலும் ஈடுபடும் பணிகள். உள்ளூர் கோயில்களில் தினசரி பூஜைகளை மேற்கொள்ளும் ஆன்மிகப் பணிகள். நேரடி மேடைகளில் இசைக்கும் கலைத் திறன் கொண்ட இசைக் கலைஞர்கள். இயந்திரத் தயாரிப்புகளை விட மனிதக் கரங்களால் உருவாக்கப்படும் கலைப் பொருட்களின் மதிப்பு உயரும். உள்ளூர் சமூகப் பணிகள்: மக்களை ஒன்றிணைக்கும் சமூகச் செயல்பாடுகள். உடல் உழைப்பு சார்ந்த நடனம், நாடகம் போன்ற நேரடி கலை நிகழ்ச்சிகளில் ஏஐ தேவையும், பயன்பாடும் இருக்காது.
"நாம் ஈட்டும் வருமானத்தை மட்டுமே நமது சுயமதிப்பாகக் கருதினால், ஏஐ காலத்தில் அது பெரிய நெருக்கடியைத் தரும். அதிக சம்பளம் கிடைக்காது என்பதால் மேற்சொன்ன பணிகளைப் பலரும் தவிர்க்கிறார்கள். ஆனால், இந்த வேலைகளில் ஈடுபடுபவர்கள் ஏஐ அச்சுறுத்தலால் பாதிக்கப்பட மாட்டார்கள்."
தொழில்நுட்ப உலகில் உச்சத்தில் இருக்கும் ஒருவரே, மீண்டும் மனித நேயம் மற்றும் இயற்கை சார்ந்த பணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருப்பது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.