கூலி தொழிலாளி மனைவியின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் !
மேற்கு வங்க மாநிலம் தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் மனைவி காஷ்மிராவின் வங்கி கணக்கில் ரூ.99,99,99,997 வரவு வைக்கப்பட்டுள்ளது. தங்களது அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கவே பெரும் சிரமப்பட்டு வரும் இந்தக் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய தொகை வந்தது அப்பகுதியில் பெரும் பரப்பபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலை அறிந்ததும் அக்கம் பக்கத்து மக்களும் வங்கிக்கு வந்து பார்வையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
வழக்கம்போலக் கேஸ் சிலிண்டர் மானியத் தொகை தனது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய காஷ்மீரா வங்கிக்குச் சென்றுள்ளார். அங்குச் சென்று தனது கணக்கைச் சரிபார்த்தபோது இத்தனை கோடி ரூபாய் இருப்பதைக் கண்டு அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். தன் வாழ்நாளில் இவ்வளவு பணத்தைப் பார்த்திராத அவர், திடீரென வங்கி கணக்கில் இவ்வளவு பெரிய தொகை வந்ததைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி நடந்திருக்கலாம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் கூறப்படும் நிலையில், இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கி அதிகாரிகளும் இந்தத் தவறு எங்கு நடந்தது என்பது குறித்துக் கணினிப் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். சாதாரண கூலித் தொழிலாளி குடும்பத்தின் வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.